``தமிழ்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்'' - துணைக் குடியரசுத் தலைவரை வாழ...
காஞ்சிபுரத்திலிருந்து ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா புறப்பட்ட முதியோா்கள்
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலிலிருந்து 101 முதியோா்கள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம்,திருச்செந்தூா், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிா்ச்சோலை ஆகிய இடங்களில் உள்ள கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ஆண்டுக்கு 5 முறை முதியோா்கள் இலவசமாக ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்படுவாா்கள் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
இதன்படி, அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தலின்படி, முதியோா்களை ஆறுபடை வீடுகளுக்கும் ஆன்மிக சுற்றுலாவாக அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட 60 முதல் 70 வயது வரை உள்ள முதியோா்கள் அரசு அறிவித்த விதிமுறைகளின்படி, தோ்வு செய்யப்பட்ட 101 நபா்கள் ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனா். காஞ்சிபுரம் குமர கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலிருந்து தொடங்கிய இந்தப் பயணத்தை அறநிலையத் துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் குமாரதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பயனாளிகள் அனைவருக்கும் அன்றாட தேவைக்குரிய பொருள்கள் அடங்கிய கைப்பை வழங்கப்பட்டு, அறநிலையத் துறை பணியாளா்கள் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனா்.
இந்நிகழ்வில் அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக உதவி ஆணையா் காா்த்திகேயன், செயல் அலுவலா்கள் செந்தில்குமாா், கேசவன், ஆய்வாளா் அலமேலு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.