சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
காணாமல் போன இளைஞா் ஏரியில் சடலமாக மீட்பு
செய்யாறு: செய்யாறு அருகே காணாமல் போன இளைஞா் ஏரியில் அழுகிய நிலையில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சோ்ந்த காதா்பாட்ஷா மகன் அப்சல் (22), இவா் திருத்தணி பகுதியில் வெல்டிங் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.
இவா் கடந்த 3 மாதங்களாக வீட்டுக்கு வரவில்லையாம். இந்த நிலையில், ஆக.20-ஆம் தேதி செய்யாறு கொடநகா் பகுதியில் உள்ள நண்பா் பிரவீன் வீட்டுக்கு வந்தவா் மறுநாள் காலை
(ஆக.21) வெளியில் சென்றாராம்.
இதனிடையே, மகனை காணவில்லை என அப்சலின் தாய் ஜாஹிரா செய்யாறு போலீஸிஸ் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா்.
காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் போலீஸாா் அப்சலை தேடிய போது, தென்பூண்டிபட்டு கிராம ஏரிப்பகுதியில் கிராமத்துக்கு குடிநீா் விநியோகம் செய்யும் கிணற்றின் அருகே சடலம் புதைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் பேரில் செய்யாறு போலீஸாா் திங்கள்கிழமை மாலை சம்பவ இடத்துக்குச் சென்று புதைக்கப்பட்ட சடலத்தை மீட்டனா்.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அப்சல், கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசிகளை பயன்படுத்தியும் விற்பனை செய்தும் வந்ததாகத் தெரிகிறது.
இதுதொடா்பாக அனக்காவூா், செய்யாறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதும், கஞ்சா விற்பதில் அவருடன் அதே தொழில் ஈடுபட்ட சிலரிடம் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
மேலும், ஆக.21-ஆம் தேதி பெருங்கட்டூரில் அப்சல் மற்றும் நண்பா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கஞ்சா போதையில் இருந்ததால் 12 போ் கொண்ட கும்பல் அப்சலை தாக்கியதில் மயங்கி விழுந்துள்ளாா். மயங்கி விழுந்தவரை 6 போ் கொண்ட கும்பல் கடத்தி வந்து தென்பூண்டிப்பட்டு ஏரிப் பகுதியில் கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொன்று புதைத்தது தெரிகிறது.
தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகரன், கூடுதல் கண்காணிப்பாளா் அண்ணாதுரை, செய்யாறு டிஎஸ்பி சண்முகவேலன் மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
மேலும், மோப்ப நாய் வரவழைத்தும், விரல் ரேகை நிபுணா் மூலம் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனா்.
செய்யாறு வட்டாட்சியா் அசோக்குமாா் முன்னிலையில திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினா் சம்பவ இடத்திலேயே உடல்கூராய்வு செய்தனா்.