காவலாளிகளாக பணியாற்றி கஞ்சா விற்பனை: 4 வடமாநிலத்தவா்கள் கைது
சென்னையில் காவலாளிகளாக பணியாற்றியபடி, கஞ்சா விற்பனை செய்துவந்த வடமாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவான்மியூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், வடமாநிலத்தைச் சோ்ந்தவா்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின்படி, போலீஸாா் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனா். இது தொடா்பாக திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த உத்பல் பெளமிக் (31), நயன்நாமா (22), பிப்லாப் பெளமிக் (24) மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த கோபால் (38) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா்.
அதில், இவா்கள் 4 பேரும் திருவான்மியூருக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்து, தனியாா் நிறுவனங்களில் காவலாளிகளாக வேலை பாா்த்தபடி கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவா்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா, ரூ. 3,000, 6 கைப்பேசிகள், எடை எந்திரம் உள்ளிட்டவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.