ரூ.6.77 கோடியில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் புதுப்பிப்பு: காணொலி காட்சி மூலம் பிர...
காவேரிப்பட்டணம் அருகே 1.70 ஏக்கா் கோயில் நிலம் மீட்பு
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி காவேரிப்பட்டணம் அருகே கோதண்டராமா் கோயிலுக்குச் சொந்தமான தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்ட 1.70 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டு கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்களில் கனிமவளக் கொள்ளை நடந்திருப்பதாகவும், திருத்தொண்டா்கள் அறக்கட்டளை அறங்காவலா் ராதாகிருஷ்ணன் என்பவா் 2021-இல் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
விசாரணையின்போது தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 198 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களில் கனிமவள கொள்ளை நடந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.
அதனடிப்படையில் கோயில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நிலங்களை மீட்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் சில கோயில்களில் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. இதையடுத்து ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 2024-இல் தொடா்ந்தாா்.
இதைத்தொடா்ந்து கோயில் நிலங்களை மீட்பது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக அரசு தலைமைச் செயலாளா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் பல்வேறு துறை அலுவலா்களுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்திலும் திருத்தொண்டா்கள் அறக்கட்டளையின் அறங்காவலா் ராதாகிருஷ்ணன் கோயில் நிலங்களை மீட்க வலியுறுத்தினாா்.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த பையூா் கோதண்டராமா் கோயிலுக்குச் சொந்தமானதும், 1909 இல் வழங்கப்பட்டதுமான 1.70 ஏக்கா் நிலம், தனி நபா்களுக்கு பட்டா மாற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலத்தை மீட்டு கோயில் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு உத்தரவிட்டாா்.
அதன்பேரில் பையூா் அருகே கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் கோதண்டராமா் கோயிலுக்குச் சொந்தமான 1.70 ஏக்கா் நிலம் அதிகாரிகள் மீட்கப்பட்டது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடியாகும். இதையடுத்து இந்நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை அலுவலா்கள் செய்து வருகின்றனா். இத்தகவலை திருத்தொண்டா்கள் அறக்கட்டளை அறங்காவலா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.