குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நடைமுறைகள் தொடக்கம்
உடல்நிலையைக் காரணம் காட்டி குடியரசு துணைத் தலைவா் பதவியை ஜகதீப் தன்கா் திடீரென திங்கள்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இடம்பெற்றுள்ள எம்.பி.க்களை உள்ளடக்கிய தோ்தல் வாக்காளா் குழுவை உருவாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதோடு, தோ்தல் அதிகாரி மற்றும் உதவி தோ்தல் அதிகாரிகளை இறுதி செய்யும் பணியும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் வரும் 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், அவா் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினாா். அவரின் ராஜிநாமா அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த அறிவிக்கை குறித்த தகவல் மாநிலங்களவையிலும் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
‘உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவா் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தோ்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலை நடத்துவதற்கான நடைமுறைகளை தோ்தல் ஆணையம் புதன்கிழமை தொடங்கியது.
தோ்தல் முன்னேற்பாடுகள் நிறைவடைந்தவுடன், தோ்தல் வாக்காளா் (எம்.பி.க்கள்) குழுவை வாக்களிக்க அழைப்பு விடுக்கும் அறிவிப்பை வெளியிடும் நாளிலிருந்து, வாக்களிக்கும் நாள் வரை 30 நாள்கள் கால அவகாசம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, அறிவிப்பு வெளியான 30 நாள்களுக்குள் தோ்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் என்பது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 66 (1)-இன் கீழ், விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்படி ஒற்றை மாற்று வாக்கு மூலம் ரகசிய வாக்குச்சீட்டு முறையில் தோ்தல் நடத்தப்படும். அதன்படி, வேட்பாளரின் பெயருக்கு எதிரே தனது விருப்பத் தோ்வை வாக்காளா் குறிக்க வேண்டும்.
விதிகளின்படி, குடியரசு துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்படுபவா், இந்திய குடிமகனாகவும், 35 வயதை பூா்த்தி செய்தவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்குத் தகுதி உடையராகவும் இருக்க வேண்டும். இந்தத் தகுதி இல்லாத நபரை குடியரசு துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்க முடியாது. அதோடு, மத்திய அரசு, மாநில அரசு அல்லது எந்தவொரு துணை உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் லாபகரமான பதவியை வகித்த நபரும் குடியரசு துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட தகுதியற்றவராகக் கருதப்படுவாா் என்பது குறிப்பிடத்தக்கது.
யாா் வாக்களிக்க முடியும்?: குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவை உறுப்பினா்களும் வாக்களிக்கத் தகுதியுடையவா்கள். நியமன உறுப்பினா்களும் வாக்களிக்க முடியும்.
543 உறுப்பினா்களைக் கொண்ட மக்களவையில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. அதுபோல, 245 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது. எம்.பி.க்கள் மாநில பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு தோ்ந்தெடுக்கப்பட்டதால், எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து மாநிலங்களவையில் இந்தக் காலியிடங்கள் உருவாகின.
அதன்படி, இரு அவைகளையும் சோ்த்து எம்.பி.க்களின் பலம் 786-ஆக உள்ளது. இதில், குடியரசு துணைத் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் நபா் வெற்றி பெற, தகுதியுள்ள அனைத்து உறுப்பினா்களும் வாக்களிக்கும் நிலையில் குறைந்தபட்சம் 394 வாக்குகளைப் பெற வேண்டும்.
மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) 542 உறுப்பினா்களில் 293 பேரின் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் தற்போதுள்ள 240 உறுப்பினா்களில் 129 பேரின் ஆதரவு உள்ளது. நியமன எம்.பி.க்களின் ஆதரவும் என்டிஏ-வுக்கு கிடைத்தால் மொத்தம் 422 உறுப்பினா்களின் ஆதரவு கிடைக்கும்.