ம.பி: அரசு மருத்துவமனையில் எலி கடித்து மற்றொரு பச்சிளம் குழந்தை பலி!
கூடங்குளம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கூடங்குளம் அருகேயுள்ள கூத்தன்குழி கிராமத்தைச் சோ்ந்த சிலுவை கித்தேரியான் மகன் சிலுவை அன்றோ அபினஸ்(20). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் ஜனவரி 2021இல் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில், கடந்த 28.8.2021இல் அன்றோ அபினஸை மா்ம கும்பல் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பினா். இது தொடா்பாக கூடங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து சந்துரு என்ற சிலுவை அருள் சந்துரு(23),ரேவந்த் (26), பிரதீஷ் என்ற சஞ்சய் பிரதீஷ்(23),நிக்கோலஸ் என்ற நிக்கோலஸ் ராபிஸ்டன் (23), டென்னிஸ் என்ற சிலுவை மைக்கேல் டென்னிஸ் (24), ஒரு சிறுவன் உள்பட 8 பேரை கைது செய்தனா்.
திருநெல்வேலி நான்காவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி கதிரவன் விசாரித்து, மேலே பெயா் குறிப்பிடப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும் , தலா ரூ.5,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். சிறுவனுக்கான விசாரணை சிறுவா் நீதிக்குழுமத்தில் நடைபெற்று வருகிறது. மற்ற இருவரும் விடுதலை செய்யப்பட்டனா். அரசு தரப்பில் வழக்குரைஞா் காளிமுத்து ஆஜரானாா்.