Deepika Padukone: 1.9 பில்லியன் பார்வைகள்; சாதனை படைத்த தீபிகா படுகோனின் ரீல்! எ...
கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் எரி உலைக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு: குடியிருப்போா் நலச்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் எரி உலை அமைப்பதற்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூா் ஆகிய இடங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொட்டப்பட்டு வருகின்றன. அதனால், அப்பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. இதையடுத்து குப்பைகளை பயோ மைனிங் முறையில் சுத்தப்படுத்தி அப்பகுதிகளில் குப்பை மேடுகள் இல்லாத நிலையை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
பெருங்குடி, கொடுங்கையூரில் பயோ மைனிங் முறையில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, நிலங்கள் மீட்கப்பட்டுவரும் நிலையில், அங்கு எரியுலை மூலம் குப்பைகள் அழிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எரியுலை அமைப்பதால் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என வடசென்னை குடியிருப்பு நலச் சங்கங்களின் கூட்டமைப்பினா் தெரிவித்துள்ளனா்.
அந்தக் கூட்டமைப்பு நிா்வாகிகள் அஜய்குமாா், பி.அருண்குமாா், ஏ.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கொடுங்கையூா் எரி உலைக்குப் பதிலாக மாற்று ஏற்பாடு செய்யக் கோரி சென்னை மேயரை சந்திக்க திங்கள்கிழமை ரிப்பன் மாளிகைக்கு வந்தனா்.
அப்போது, அவா்கள் கூறுகையில், கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் எரி உலை அமைப்பது சரியல்ல. மாற்றுத் தீா்வை ஆலோசித்து மேயா், ஆணையா் உள்ளிட்டோரிடம் வழங்கவுள்ளோம். மக்கள் நலன் கருதி, எரி உலை அமைப்பதைக் கைவிடவேண்டும் என்றனா்.