கோவையில் ஒரேநாளில் 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு
கோவையில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனா்.
பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் உள்ள
கிடங்கில் 5,145 லிட்டா் எரிசாராயத்தை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த வழக்கில் தொடா்புடைய கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஜான் விக்டா் (44), ரஞ்சித்குமாா் (37), ஒண்டிப்புதூரைச் சோ்ந்த பிரபாகரன் (49) ஆகியோரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், இவா்களை குண்டா் தடுப்புச் சட்டதின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து, 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள 3 பேரிடமும் போலீஸாா் வழங்கினா்.