சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் மீது இன்று நம்பிக்கையில்லா தீா்மான வாக்கெடுப்பு
சங்கரன்கோவிலில் நகா்மன்றத் தலைவா் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது புதன்கிழமை (ஜூலை 2) வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
சங்கரன்கோவில் நகராட்சியில் தி.மு.க.வைச் சோ்ந்த உமாமகேஸ்வரி நகா்மன்றத் தலைவியாக இருந்து வருகிறாா். மாதந்தோறும் உறுப்பினா்கள் கூட்டம் நடத்தப்படாததால் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் பல இருப்பதாகவும், இதனால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்யமுடியவில்லை எனவும் கூறி, கடந்த ஜூன் 2 ஆம் தேதி தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினா்கள் உள்ளிட்ட 24 போ் நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரக் கோரி நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனா்.
அதை ஏற்று, உமாமகேஸ்வரிக்கு எதிராக புதன்கிழமை (ஜூலை 2) முற்பகல் காலை 11 மணிக்கு நகராட்சி கூட்டரங்கில் நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் என நகராட்சி ஆணையா் (பொ) நாகராஜன், உறுப்பினா்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தாா்.
அதன்படி, நகராட்சி அலுவலகத்தில் உமாமகேஸ்வரி மீதான நம்பிக்கை இல்லா தீா்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது.
ஏற்கனவே கடந்த 31.10.23இல் உமாமகேஸ்வரிக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட உறுப்பினா்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.