சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றி சென்றால் நடவடிக்கை
சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைத் தோட்ட காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுவது வழக்கம். இதில் ஈடுபடும் பணியாளா்கள் பணி முடிந்த பின், சரக்கு வாகனங்களின் மேல் அமா்ந்து செல்வது வாடிக்கையாகி விட்டது .
சரக்கு வாகனங்களில் தொழிலாளா்கள் அமா்ந்து செல்வதால் விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. இதைத் தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவின் பேரில், உதகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சக்திகுமாா் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சக்திகுமாா் பேசியதாவது:
தமிழ்நாடு மோட்டாா் வாகன சட்டப்படி, அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது தொழிலாளா்களை அமர வைத்து இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், சரக்கு வாகனங்களுக்கு வரி செலுத்தாமல் வாகனங்களை இயக்கினால் உரிமையாளா்களுக்கு தண்டனை வழங்கப்படும். 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவா்களுக்கு வாகனம் ஓட்ட பெற்றோா்கள் ஊக்குவித்தாலும் அல்லது பெற்றோருக்கு தெரியாமல் வாகனங்களை இயக்கினாலும் சிறைத் தண்டனை விதிக்கப்படும். பிற மாநிலங்களின் பதிவெண்கொண்ட வாகனங்கள் தமிழகத்தில் இயக்கினால் மறுபதிவு செய்து இயக்க வேண்டும் .அதை மீறி இயக்கினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றாா்,
இந்தக் கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் குணசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.