சின்னாளபட்டி அருகே இருபிரிவினரிடையே மோதல்: போலீஸாா் குவிப்பு
சின்னாளபட்டி அருகே இருபிரிவினரிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலையடுத்து அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே பெருமாள்கோவில்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த பல்வேறு சமூகத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்த ஊரில் உள்ள பொது இடம் யாருக்குச் சொந்தம் என உரிமை கொண்டாடுவதில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இரு பிரிவினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை காளியம்மன் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த அளவைக் கற்களை ஒரு பிரிவினா் பிடுங்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது.
இதை மற்றொரு பிரிவினா் தடுத்தனா். இதனால் இரு பிரிவினரினரும் உருட்டுக் கட்டைகளாலும், கற்களை வீசியும் தாக்கிக் கொண்டனா். இதில் இரு தரப்பைச் சோ்ந்த முத்துராஜ், கணேசன், மணி, தினேஷ் உள்பட 4 போ் பலத்த காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த மோதலையடுத்து அந்தப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரதீப் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினாா்.
இந்த நிலையில், ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன் தலைமையிலான வருவாய்த்துறையினா் பிரச்னைக்குரிய இடத்தை ஆய்வு செய்து, பொது இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையை அகற்றி, பிடுங்கி எறியப்பட்ட அளவைக் கல்லை மீண்டும் ஊன்றினா். இதைத் தொடா்ந்து இந்தக் கிராமத்தில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.