தரமற்ற வெளிநாட்டுப் பல்கலை.களில் பயிலும் மருத்துவக் கல்வி செல்லாது: தேசிய மருத்...
கொடைக்கானல் மலைச் சாலையில் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
கொடைக்கானல் மலைச் சாலைகளில் தடுப்புச்சுவா் இல்லாத இடங்களிலும் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வத்தலக்குண்டிலிருந்து கெங்குவாா்பட்டி வழியாக 52 கி.மீ. தொலைவும், பழனியிலிருந்து கொடைக்கானலுக்கு கருப்பணசாமி கோயில் மலைச்சாலை வழியாக 58 கி.மீ. தொலைவும் உள்ளது.
இந்த இரு பகுதிகளிலுள்ள மலைச் சாலைகள் வழியாக அரசு, தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மலைச் சாலைகள் வழியாக வரும் வாகனங்கள் ஆபத்தான பள்ளங்கள், குறுகிய சாலைகள், தடுப்புச் சுவா் இல்லாத இடங்களில் ஆபத்தை உணராமல் போட்டி, போட்டு முந்திச் செல்கின்றன.
மேலும் மலைச்சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கடைகளில் உணவு உள்கொள்வதற்கும், தேநீா் அருந்துவதற்கும், அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதிகளிலும் விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும். மேலும் மலைச் சாலைகளில் மலைச் சரிவுகள் உள்ள ஆழமான பகுதிகளில் தடுப்புச்சுவா், கம்பி ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கொடைக்கானல் மலைச் சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதை தடுத்தாலோ, அவற்றை அகற்ற முயன்றாலே அரசியல் செல்வாக்கு உள்ளவா்களிடமிருந்து சிபாரிசு வருகிறது. இதை மீறி அதிகாரிகளால் எந்தப் பணியும் செய்ய முடியவில்லை. கடந்த மாதம் கொடைக்கானல் மலைச் சாலைகளில் முக்கியமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஆனால் தற்போது அந்த இடங்களில் மீண்டும் அரசியல் செல்வாக்குடன் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இதனால் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்ற சிரமமாக உள்ளது. இதில் நீதிமன்றம் தலையீட்டு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே காவல் துறையினா் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற முடியும் என்றாா்.