சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் கைது
தேவியாக்குறிச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தலைவாசல் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், தேவியாக்குறிச்சி ஊராட்சி, ஆதிதிராவிடா் தெருவில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா சம்பந்தமாக ஊா் பொதுமக்கள் ஒன்றுகூடி பேசிக் கொண்டிருந்தனா். அங்கு மதுபோதையில் ஒருவா் பிரச்னை செய்வதாக தலைவாசல் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் அங்கு சென்றாா். அவரை, மதுபோதையில் இருந்த மணிகண்டன் என்பவா் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து தள்ளிவிட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் உதவி ஆய்வாளா் கோபால் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் ஆகியோா் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.