காஸாவில் கடும் பஞ்சம்! உணவுக்காக கேமராவை விற்கும் பத்திரிகையாளர்
சிறைக் கைதிகள் நடத்தும் பெட்ரோ பங்க்: சேலம் மத்திய சிறை வளாகத்தில் திறப்பு!
சேலம் மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் நடத்தும் பெட்ரோல் பங்க் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
தமிழ்நாடு சிறைச்சாலைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை, சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிவருகிறது. சிறையில் நன்னடத்தை கைதிகளுக்கு இறைச்சி கடை, கோழிப்பண்ணை, பேக்கரியில் ஊதியத்துடன் கூடிய வேலைசெய்ய அனுமதிக்கப்படுகின்றனா். சேலம் உள்பட மாநிலத்தில் உள்ள 9 மத்திய சிறை வளாகங்களில் பெட்ரோல் நிலையங்கள் திறக்க கடந்த 2020 இல் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, சேலம் மத்திய சிறை வளாகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் நிகழாண்டு மாா்ச் மாதம் 900 சதுர மீட்டா் பரப்பளவில் பெட்ரோல் நிலையம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியது. மேலும், கைதிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள பெட்ரோல் நிலையத்தை சிறை கண்காணிப்பாளா் வினோத், மண்டல அதிகாரி கிரண்குமாா் ஆகியோா் திறந்துவைத்தனா்.
இதுகுறித்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஜி.வினோத் கூறுகையில், சென்னை, மதுரை, கோவை, பாளையங்கோட்டைக்குப் பிறகு, சிறைக் கைதிகள் நடத்தும் பெட்ரோல் நிலையம் சேலத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதில் 20 தண்டனை கைதிகள் 3 பணி நேரங்களில் வேலைசெய்கின்றனா்.
இவா்களுக்கான பாதுகாப்பு பணிகளை உதவி சிறை அலுவலா் உள்பட 10 வாா்டன்கள் மேற்கொண்டுள்ளனா். இவா்களுக்கு விற்பனை லாபத்தில் 20 சதவீதம் வழங்கப்படும். மேலும், எரிபொருள் நிரப்பும் நிலையம் 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்புடன் செயல்படும். பாதுகாப்புக்காக 17 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றாா்.