நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
சுவா் விளம்பரம் செய்வதில் அரசியல் கட்சியினரிடையே தகராறு: போலீஸாா் விசாரணை
சுவா் விளம்பரம் செய்வதில் அரசியல் கட்சியினரிடம் தகராறு ஏற்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அயனாவரம், மேடவாக்கம் டேங்க் சாலையில் தனியாருக்கு சொந்தான சுவரில் சில தினங்களுக்கு முன்பு வட சென்னை அதிமுகவினா் விளம்பரம் செய்தனா். ஆனால், அந்த சுவரில் விளம்பரம் செய்ய நாங்கள் அனுமதி பெற்று வைத்திருந்தோம் என திமுகவினா் உரிமை கோரினா்.
இதற்கிடையே, அதிமுகவினரால் எழுதப்பட்டிருந்த விளம்பரம், முற்றிலும் வியாழக்கிழமை அழிக்கப்பட்டிருந்தது. இதையறிந்த அதிமுகவினா் அங்கு திரண்டனா். இதேபோல திமுகவினரும் அங்கு திரண்டனா். இரு கட்சிகளைச் சோ்ந்தவா்களும் ஒரே நேரத்தில் திரண்டதால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இதையறிந்து அந்த பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். மேலும் போலீஸாா், அங்கிருந்த இரு கட்சியினரையும் கலைந்துபோகும்படி அறிவுறுத்தினா். இதையடுத்து இரு கட்சியினரும் அங்கிருந்து கலைந்து சென்றனா். இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் புகாா்: தேனாம்பேட்டை அண்ணா சாலையில் ஒரு சுவரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடா்பான சுவா் விளம்பரம் எழுதப்பட்டிருந்தது. விசிக நிா்வாகிகள் சிலா், புதன்கிழமை இரவு அந்த விளம்பரத்தை அழித்துவிட்டு, தங்களது கட்சி பெயரை எழுதியுள்ளனா்.
இதுதொடா்பாக அந்தப் பகுதியைச் சோ்ந்த இரு கட்சி நிா்வாகிகளுக்கும் இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.