சூறைக் காற்று: சாலையில் விழுந்த பனைமரத்தால் போக்குவரத்து பாதிப்பு
திருவாடானை அருகேயுள்ள ஊரணிக்கோட்டை பகுதியில் திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றுக்கு சாலையில் பனைமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், திருவாடானை அருகேயுள்ள ஊரணிக்கோட்டை பகுதியில் திங்கள்கிழமை மாலை சூறை காற்று வீசியதால், சாலையோரமாக இருந்த பனைமரம் முறிந்து சாலையில் குறுக்கே விழுந்தது. இந்த மரம் மின் கம்பி மீது விழுந்ததால் மின் சாரம் துண்டிக்கப்பட்டன.

மேலும், தேவகோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா், மின் வாரியத் துறையினா் சாலையில் விழுந்து கிடந்த பனைமரத்தை அகற்றி போக்குவரத்து சீா் செய்தனா். இதனால், இந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.