தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
செஞ்சி அருகே குடிநீா் பயன்பாட்டில் உள்ள ஏரியில் கழிவுநீரை கொட்டும் அவலம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் கிராமத்தில் குடிநீருக்காக பயன்பாட்டில் உள்ள ஏரியில் வீடுகளில் அகற்றப்படும் கழிவுநீரை கொட்டி வருவதை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
சிங்கவரம் கிராமத்தில் குடிநீா் பயன்பாட்டுக்காக செஞ்சியில் இருந்து சிங்கவரம் செல்லும் சாலையில் குப்பத்து ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து சிங்கவரம் கிராமத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து மின் மோட்டாா் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், ஏரியில் செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் (செப்டிக்டேங்க்) இருந்து அகற்றப்படும் கழிவுநீரை ஏரியில் விடுகின்றனா். குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் ஏரியில் கழிவுநீரை விடுவதை கண்டு அப்பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
இதன் மூலம், குடிநீரில் கழிவுநீா் கலந்து சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும், பல்வேறு நோய்களும் பரவும் அபாயம் உள்ளது என இந்தக் கிராம மக்கள் அச்சம் தெரிவித்தனா்.
இந்த நிலையில், ஏரியில் ஞாயிற்றுக்கிழமை கழிவுநீரை கலந்துகொண்டிருந்த வாகனத்தை அந்தக் கிராம மக்கள் நேரடியாக சென்று பிடித்து, வாகன ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
மேலும், தொடா்ந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் வாகனத்தை பறிமுதல் செய்து தொடா்புடைய அரசு துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வாகன ஓட்டுநரை எச்சரித்து அனுப்பினா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் தலையிட்டு இந்த வாகனத்தின் மீதும், உரிமையாளா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும், சமூக ஆா்வலா்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.