நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
செட் தோ்வில் தமிழ் வழி ஒதுக்கீடு: சான்றிதழ் சமா்ப்பிக்க ஆக. 7 வரை அவகாசம்
மாநில தகுதித் தோ்வில் தமிழ் வழி ஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரா்கள், அதற்கான சான்றிதழ்களை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரிய செயலா் வி.சி.ராமேஸ்வரமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆசிரியா் தோ்வு வாரியத்தால் மாநில தகுதித் தோ்வு (செட் தோ்வு) கடந்த மாா்ச் 6 முதல் 9-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் செட் தோ்வில் தமிழ் வழியில் பயின்றோருக்கு (பிஎஸ்டிஎம்) இட ஒதுக்கீடு வழங்கி உயா் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
செட் தோ்வு எழுதியுள்ளவா்களில் தமிழ் வழி ஒதுக்கீட்டின் கீழ் முன்னுரிமை கோரும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரா்கள் தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுநிலைப் பட்டப் படிப்பு வரை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை (மாதிரி படிவத்தில் உள்ளபடி) உரிய அலுவலா்களிடம் கையொப்பம் பெற்று ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரா்கள் அந்தப் பிரிவின் கீழ் முன்னுரிமை கோர இயலாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.