பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
சென்னைப் பல்கலை. பேராசிரியரின் பணி நீட்டிப்பு: பதவிக் காலத்தைக் குறைத்த உத்தரவு ரத்து
சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியரின் பணி நீட்டிப்பு பதவிக் காலத்தைக் குறைத்து பல்கலை. நிா்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வெங்கடாச்சலபதி என்பவா் தாக்கல் செய்த மனுவில், நான் சென்னைப் பல்கலை.யில் தத்துவவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றேன். பல்கலை. சட்டப்படி கல்வியாண்டு முடியும் ஜூன் 30-ஆம் தேதி வரை பணியாற்ற எனக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. எனது துறைக்கு புதிய தலைவா் நியமிக்கப்படும் வரை, எனக்கு மேலும் பணி நீட்டிப்பு வழங்கக் கோரி பல்கலை. நிா்வாகத்திடம் மனு அளித்தேன்.
அந்த விண்ணப்பத்தை பல்கலை. நிா்வாகம் பரிசீலிக்கவில்லை. எனவே, எனக்கு பணி நீட்டிப்பு வழங்க பல்கலை. நிா்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வெங்கடாச்சலபதியின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், கல்வியாண்டு முடியும் ஒரு மாதத்துக்கு முன்பாகவே வெங்கடாச்சலபதியின் பதவிக் காலத்தைக் குறைத்து பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இதையடுத்து வெங்கடாச்சலபதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், கே.சுரேந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பல்கலை. சட்டப்படி மனுதாரரின் பணி நீட்டிப்புக் காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிகிறது. ஆனால், அவரது பதவிக் காலத்தை ஒரு மாதத்துக்கு முன்பாக குறைத்தது செல்லாது எனக்கூறி பல்கலை. உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா். மேலும், மனுதாரருக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.