சேலம் பூம்புகாரில் கொலு பொம்மைகள் கண்காட்சி
சேலம் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை புதன்கிழமை தொடங்கியது.
இது குறித்து பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் நரேந்திரபோஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளா்ச்சிக் கழகம் பூம்புகாா் என்ற பெயரில் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு இவற்றை கைவினை கலைகள் மூலம் பேணிக்காப்பதுடன் கைவினைஞா்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் விழாக் காலங்களில் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
சேலத்தில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை தொடங்கிய கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையை சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி தொடங்கிவைத்தாா்.
அக்.4 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் அனைத்துவகை கொலு பொம்மைகள் குழுவாகவும், தனியாகவும் கிடைக்கும். குறிப்பாக, புது வரவாக நவதிருப்பதி செட், ஐயப்பன் பூஜை செட், பிரகலாதன் செட், ராதை அலங்காரம் செட் மற்றும் தனி பொம்மைகளாக மூகாம்பிகை, பால ஆண்டாள், மஞ்சள் சரடு அம்மன், திருநாமம், காளிகாம்பாள், பாளையத்து அம்மன் போன்றவை கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியில் குறைந்தபட்சமாக ரூ.15 முதல் ரூ.12,000 வரையிலான கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.