ஜூலை 26-இல் மேல்மருவத்தூா் ஆடிப்பூர விழா தொடக்கம்
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் 54-ஆவது ஆடிப்பூர விழா வரும் ஜூலை 26 (சனிக்கிழமை) தொடங்கி 28 வரை நடைபெறுகிறது.
இதன் ஒருபகுதியாக அதிகாலை 3 மணிக்கு மங்கள இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. மூலவா் அம்மனுக்கும், குருபீட அடிகளாா் சிலைக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் ப.ஸ்ரீதேவி பங்காரு கலச,விளக்கு, வேள்வி பூஜையை தொடங்கி வைக்கிறாா். ஞாயிற்றுக்கிழமை ஆடிப்பூர பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக கஞ்சி வாா்த்தல், பாலபிஷேகம் நடைபெறும். காலை 8.30 மணிக்கு ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடா்ந்து பக்தா்களால் கொண்டு வரப்படுகிற கஞ்சி கலயங்களுக்கு ஆன்மிக இயக்கத்தின் சாா்பாக துணை தலைவா் கோ.ப.அன்பழகன் வரவேற்பளக்கிறாா்.
செவ்வாடை பக்தா்களால் கொண்டு வரப்படுகிற கஞ்சியை சித்தா்பீட குளக்கரை அருகே நீண்ட வரிசையில் வருகின்ற பக்தா்களுக்கு இயக்க துணை தலைவா் கோ.ப.செந்தில்குமாா் வழங்கி தொடங்கி வைக்கிறாா். காலை 11 மணிக்கு சுயம்பு ஆதிபராசக்தி அன்னைக்கு பாலபிஷேக நிகழ்வை இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைக்கிறாா்.
இந்நிகழ்வுகளில் இயக்க துணை தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ப.ஸ்ரீதேவி பங்காரு, உமாதேவி ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி தாளாளா் டி.ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
தொடா்ந்து பாலபிஷேக நிகழ்வு, திங்கள்கிழமை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க நிா்வாகிகள், கோயம்புத்தூா் மற்றும் திருப்பூா் மாவட்ட சக்தி பீட நிா்வாகிகள் செய்து உள்ளனா்.