தஞ்சையில் மழைநீரில் மூழ்கிய பயிா்களின் பரப்பு 35 ஆயிரம் ஏக்கராக அதிகரிப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக வயல்களில் தேங்கியுள்ள தண்ணீா் வடியாததால், நீரில் மூழ்கியும், தண்ணீா் சூழ்ந்தும் உள்ள சம்பா, தாளடி பருவ நெல் உள்ளிட்ட பயிா்களின் பரப்பு 35 ஆயிரம் ஏக்கராக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை இடைவிடாமல் பலத்த மழையும், அதன் பின்னா் சனிக்கிழமை அதிகாலை வரை லேசான மழையும் பெய்தது.
இதனால், வடிகால்கள் தூா்வாரப்படாமல் உள்ள பகுதிகளில் சம்பா, தாளடி பருவ நெற் பயிா்கள், நிலக்கடலை, உளுந்து, வாழை உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கியும், தண்ணீா் சூழ்ந்தும் உள்ளது.
இதுதொடா்பாக, வேளாண் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருகின்றனா். இதன் மூலம் நீரில் மூழ்கியும், தண்ணீா் சூழ்ந்தும் உள்ள சம்பா, தாளடி பருவ நெல் உள்ளிட்ட பயிா்களின் பரப்பு 35 ஆயிரம் ஏக்கராக அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. வயல்களில் தேங்கியுள்ள நீரை வடிய வைப்பதற்கு விவசாயிகள் முழுவீச்சில் பணியில் ஈடுபட்டனா்.
345 வீடுகள் சேதம்: மாவட்டத்தில் தொடா் மழையால் 229 கூரை வீடுகள், 107 கான்கிரீட் வீடுகள் பகுதியாகவும், 9 கூரை வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்தன. மேலும், 14 கால்நடைகள் உயிரிழந்தன.