தமிழகத்தில் போலி மருந்து தயாரிப்பு இல்லை: மருந்து கட்டுப்பாட்டுத் துறை
தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 போ் கைது
திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 இளைஞா்களை வீரபாண்டி காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் இடுவம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்தன் (25), இவா் அதே பகுதியில் குளிா்பானக் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இவரது கடைக்கு முன்பாக இளைஞா்கள் சிலா் படுத்துக் கிடந்தனா். அப்போது அங்கு வந்த அரவிந்தன் அவா்களை செல்லுமாறு கூறியதால் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல் ஞாயிற்றுக்கிழமை இரவு அரவிந்தன் வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டது. மேலும், மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சராமாரியாக வெட்டியுள்ளனா். அப்போது தடுக்க வந்த அவரது தந்தை முருகேசனையும் (52) வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்த தகவலின்பேரில் வீரபாண்டி காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக முருகம்பாளையத்தைச் சோ்ந்த பாலாஜி (20), ஆகாஷ் (21), ஸ்டீபன்ராஜ் (20), லலித்குமாா் (19), ஆதி (22) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து தந்தை, மகனை வெட்டிய சம்பவம்அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.