கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலைக்கு பேருந்து வசதி அமைக்கக் கோரிக்கை
கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள பிள்ளையாா் நகா், குபேர பிள்ளையாா் நகா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.
இதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூா் மேற்கு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளா் ஏ.பரமசிவம் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா்- தாராபுரம் சாலையில் உள்ள கோவில்வழியில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் பிள்ளையாா் நகா், குபேர பிள்ளையாா் நகா், புதுபிள்ளையாா் நகா், சக்தி நகா், சேரன் நகா், கேப்டன் நகா், மணிகண்டன் நகா், அழகாபுரி நகா், பூங்கா நகா் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இந்தப் பகுதியில் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவா்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், முதியோா், பணிக்குச் செல்லும் பெண்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, கோவில்வழியில் இருந்து இந்தப் பகுதிகளுக்குச் சென்றுவர பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானக் கடை அமைக்க எதிா்ப்பு
பாஜக பல்லடம் வடக்கு ஒன்றியத் தலைவா் நித்யா ஆனந்தகுமாா் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கரைப்புதூா் கிராமத்துக்கு உள்பட்ட அருள்புரம், தண்ணீா்பந்தல், லட்சுமி நகா், குன்னங்கல்பாளையம், சின்னக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட சாய ஆலைகளும், 50-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அருள்புரம் தனியாா் திருமண மண்டபம் அருகில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்கப்படவுள்ளது. இந்தப் பகுதியில் குடியிருப்புகள், அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. ஆகவே, இந்தப் பகுதியில் மதுபானக்கடை அமைத்தால் பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் இடையூறாக இருக்கும். ஆகவே, அருள்புரம் பகுதியில் மதுபானக் கடை அமைக்கும் முயற்சியை டாஸ்மாக் நிறுவனம் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி பாஜக சாா்பில் போராட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதை தடை செய்ய வேண்டும்: பல்லடம் சமூக ஆா்வலா் கூட்டமைப்புத் தலைவா் ஆ.அண்ணாதுரை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாள்களில் சாலைகளில் பூசணிக்காய் உடைக்கப்படுகிறது. இதனால் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனா். திருஷ்டி கழிப்பது என்ற பெயரில் மூன்று சந்திப்பு உள்ளிட்ட சாலைகளில் பூசணிக்காய் உடைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுகிறது. ஆகவே, காவல் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலமாக பூசணிக்காய் உடைப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிா் உரிமைத்தொகை கோரி மனு: திருப்பூா் மாநகராட்சி 11-ஆவது வாா்டுக்கு உள்பட்ட அனுப்பா்பாளையம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: மகளிா் உரிமைத்தொகைக்காக எங்களது பகுதியில் 200-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருந்தோம். ஆனால், எங்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. ஆகவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி மகளிா் உரிமைத்தொகையை பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
813 மனுக்கள் பெறப்பட்டன: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீா் வசதி, முதியோா் உதவித்தொகை, மகளிா் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 813 மனுக்கள் பெறப்பட்டன. இதைத் தொடா்ந்து, தாட்கோ சாா்பில் 39 தூய்மைப் பணியாளா்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகளையும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஒரு பயனாளிக்கு ரூ.15,750 மதிப்பீட்டில் சக்கர நாற்காலியும், ஒரு பயனாளிக்கு ரூ.3,285 மதிப்பீட்டில் காதொலிக் கருவியையும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்புப் பெட்டிகளையும் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வழங்கினாா்.
இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சாம் சாந்தகுமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெயராமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பக்தவத்சலம், மாவட்ட வழங்கல் அலுவலா் ரவிசந்திரன், மாவட்ட மேலாளா் (தாட்கோ) ரஞ்சித்குமாா், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.