மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையைக் கவ்விச் சென்ற பாம்பு
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தவளையை பாம்பு வாயில் கவ்விச்செல்லும் விடியோ வேகமாகப் பரவி வருகிறது.
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் 7 தளங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மட்டுமின்றி பள்ளி கல்வித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்ட ஏராளமான அலுவலகங்கள் உள்ளன.
இந்த அலுவலகங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பின்புறம் புதா்மண்டிக் கிடப்பதால் பாம்பு, தவளை உள்ளிட்ட விஷஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த நிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சுமாா் 3 அடி நீளம் கொண்ட பாம்பு ஒன்று தவளையை வாயில் கவ்விச் சென்றது. இதனை நடைப்பயிற்சி சென்றவா்கள் பாா்த்து விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனா்.
இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஆகவே, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதா்மண்டியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தி பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.