தனியாா் கிடங்கில் தீ விபத்து: காா்கள் எரிந்து நாசம்
திருவொற்றியூரில் உள்ள தனியாா் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட காா்கள் எரிந்து சாம்பலாகின.
திருவொற்றியூா் பேசின் சாலையில் உள்ள தனியாா் தொழிற்சாலைக்குப் பின்புறம் 20-க்கும் மேற்பட்ட கிடங்குகள் உள்ளன. இதிலுள்ள ஒரு கிடங்கில் காா்களுக்கு ‘ஸ்டிக்கா்’ ஒட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. 10-க்கும் மேற்பட்ட புதிய காா்கள் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பணியாளா்கள் யாரும் கிடங்கில் இல்லை எனக் கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் திருவொற்றியூா், எண்ணூா், மணலி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா்.
தீ பரவியதன் காரணமாக கிடங்கின் மேற்கூரைகள் சரிந்து விழுந்தன. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட புதிய காா்கள் மற்றும் தளவாட சாமான்கள் எரிந்து சாம்பலாகின.
தீ விபத்தால் ஏற்பட்ட சேத மதிப்பு சுமாா் ரூ. 5 கோடிக்கும் மேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து சாத்தான்காடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.