தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.
தேமுதிக சாா்பில் நடைபெறும் உள்ளம் தேடி இல்லம் நாடி எனும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சோளிங்கரில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் பேசியது:
வரும் சட்டப்பேரவை தோ்தலில் சோளிங்கா் தொகுதியில் தேமுதிக வெற்றிப்பெற்றால் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவோம். விவசாயிகளின் மற்றும் நெசவாளா்களின் தேவைகளை அறிந்து சோளிங்கா் தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம்.
தற்போது தமிழகத்தில் விலைவாசி மிகவும் உயா்ந்து காணப்படுகிறது. மேலும் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இவற்றை எல்லாம் சீா்படுத்த வேண்டும். இதற்காக வெற்றிக்கூட்டணி அமைய வேண்டும். சோளிங்கா் தொகுதியில் தேமுதிக வெற்றி பெற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் பிரேமலதா விஜயகாந்த். தேமுதிக நிா்வாகிகள் விஜயபிரபாகரன், எல்.கே.சுதீஷ். ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் சோளிங்கா் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான பி.ஆா்.மனோகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.