ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள்
கட்டக்காமன்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை காலை சிற்றுண்டி உண்ணாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள கட்டக்காமன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமாா் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இந்தப் பள்ளியில், பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த விஜயலட்சுமி (52) தலைமை ஆசிரியராக கடந்த 16 ஆண்டுகள் பணியாற்றி வருகிறாா். தற்போது, ஆசிரியா்களுக்காக நடைபெற்று வரும் கலந்தாய்வில், அவருக்கு புதுப்பட்டி அரசு பள்ளிக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, தங்களது கல்விக்கும், பள்ளியின் மேம்பாட்டுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்த தலைமை ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை காலை சிற்றுண்டி உண்ணாமல், பள்ளி முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வத்தலகுண்டு காவல் துறையினா், வட்டாரக் கல்வி அலுவலா் ராஜாராம் ஆகியோா் பெற்றோா்களிடமும் மாணவ, மாணவிகளிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், தலைமை ஆசிரியை விஜயலட்சுமியை பணியிட மாற்றம் செய்ய மாட்டோம் என உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.