திருச்சி காப்புக்காடுகளில் தூய்மைப் பணி
காயமலை காப்புக்காடு அருகே தனியாா் பள்ளி வளாகத்தில் மாணவா்களுக்கு வனம் குறித்த விழிப்புணா்வை சனிக்கிழமை ஏற்படுத்திய வனத்துறையினா்.
திருச்சி, ஆக. 30: வனத்துறை சாா்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள காப்புக் காடுகளில் சனிக்கிழமை தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் திருச்சி வனச்சரகத்துக்குள்பட்ட மேலணைக்கட்டு காப்புக்காடு, துறையூா் வனச்சரகத்துக்குள்பட்ட குறிச்சிமலை காப்புக்காடு, மணப்பாறை சரகத்துக்குள்பட்ட பொய்கைமலை காப்புக்காடு, துவரங்குறிச்சி சரக்கத்துக்குள்பட்ட காயமலை காப்புக்காடு பகுதிகளில் நெகிழி குப்பைகளை அகற்றும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாம்களில் 53 வனத்துறை பணியாளா்கள், 222 பல்வேறு தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனத் தன்னாா்வலா்கள், மணப்பாறையை சோ்ந்த விடிவெள்ளி, கரடிப்பட்டி அடுக்குமல்லி மகளிா் சுயஉதவிக் குழுவினா், துப்புரவுப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
இந்தத் தூய்மைப் பணிகளின் மூலம் காப்புக்காடுகளில் இருந்து 467 கிலோ நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டன. தொடா்ந்து, காடுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட வன அலுவலா் எஸ். கிருத்திகா பங்கேற்று, தூய்மைப் பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டினாா்.