மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
திருப்பூரில் வங்கதேசத்தினா் 36 போ் கைது
திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 36 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் உள்ள பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்களில் பிகாா், ஒடிஸா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 23 மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை, அரசியல் மாற்றம் காரணமாக அங்குள்ள பின்னலாடை நிறுவனங்கள் பெருமளவில் முடங்கியுள்ளன. இதனால், வேலை இழந்த தொழிலாளா்கள் மேற்கு வங்கம் வழியாக சட்டவிரோதமாக ஊடுருவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் தொழிலாளா்கள் போலி ஆதாா் அட்டைகளைப் பயன்படுத்தி திருப்பூா், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தங்கி வடமாநிலத் தொழிலாளா்களைப்போல பணியாற்றி வருகின்றனா். இது தொடா்பாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, திருப்பூா் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் காவல் துறையினா் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.
மேலும், வெளிமாநிலத் தொழிலாளா்கள் அதிகம் உள்ள நிறுவனங்கள், விடுதிகளில் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் நல்லூா் ஊரக காவல் நிலையம், 15 வேலம்பாளையம், திருப்பூா் தெற்கு காவல் நிலையம் ஆகிய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் துறையினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 36 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதில், திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 20 பேரும், நல்லூா் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 10 பேரும், திருப்பூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் சிலா் போலி ஆதாா் அட்டைகள் மூலமாகத் தங்கியுள்ளது தெரியவந்ததைத் தொடா்ந்து மாநகரில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கையை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 22 நாள்களில் வங்கதேசத்தினா் 75 போ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.