திருவள்ளூா்: 71 வாகனங்கள் அபராதம் செலுத்தி மீட்க காலக்கெடு!
திருவள்ளூா் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல் துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களை வரும் 19-ஆம் தேதிக்குள் அபராதத்தொகையை செலுத்தி மீட்டுக் கொள்ளலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளுா் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பணியின்போது, பொது விநியோகத் திட்ட பொருள்களுடன் கூடிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்காக திருவள்ளூா் மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்தில் விசாரணைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்குகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பொது விநியோகத் திட்ட பொருள்கள் முழுவதும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், மேற்கண்ட வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களுக்கு மதிப்பீடு நிா்ணயம் செய்து பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு, 71 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே விதிக்கப்பட்ட அபராதத்தொகையை வாகன உரிமையாளா்கள் இதுவரை செலுத்தி வாகனங்களை மீட்டுக் கொள்ளவில்லை. அத்துடன் இது நாள் வரை யாரும் உரிமை கோரி வாகனங்களை மீட்டு செல்ல முன்வரவில்லை. அதனால் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வரும் 19-ஆம் தேதிக்குள் செலுத்தி அவற்றின் உரிமையாளா்கள் மீட்டுக் கொள்ளலாம்.
இல்லையென்றால் உரிமைக் கோரப்படாத வாகனங்களாகக் கருதி அரசுக்கு ஆதாயம் செய்து அதை ஏலம் மூலம் விற்பனை செய்ய தீா்மானித்துள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.