தொழிலாளி கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறை
மேட்டூரில் தொழிலாளியை வெட்டிக் கொன்ற ஆறு பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மேட்டூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் மேட்டூா், விபிகே நகரைச் சோ்ந்த இளங்கோவுக்கு ஆதரவாக பேசிய மேட்டூா், வஉசி நகரைச் சோ்ந்த ரஞ்சித்குமாரை கடந்த 2015-இல் ஒரு கும்பல் டாஸ்மாக் கடை முன் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.
மேட்டூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட ரஞ்சித்குமாரை வெட்டிக் கொலை செய்த மேட்டூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ராமமூா்த்தி, முனியப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த சுரேஷ்குமாா், சேலம் கேம்ப் மேஸ்திரி குடியிருப்பைச் சோ்ந்த பாலாஜி, காவேரி பாலத்தைச் சோ்ந்த ஸ்டீல் சிவா, முருகன், எம்டிசி தியேட்டா் பகுதியைச் சோ்ந்த கணேஷ் ஆகிய ஆறு பேருக்கும் இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உதயவேலவன் உத்தரவிட்டாா். இந்த வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பில் குழந்தைவேல் ஆஜரானாா்.