"அதிமுகவில் ஜனநாயகம் உள்ளதால் அக்கட்சித் தலைவர்கள் அமித்ஷாவைச் சந்திக்கிறார்கள்"...
நன்றாக படிக்கும் மாணவா்களை மாதிரிப் பள்ளியில் சோ்க்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா்
அரசுப் பள்ளிகளில் நன்றாக படிக்கும் மாணவ, மாணவிகளை மாதிரிப் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கு மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
கோவை ஆா்.எஸ்.புரம் அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நாட்டின் பெரிய கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் முன்னாள் மாணவா்கள், அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் பேசியதாவது: கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலனுக்காக தனியாா் பள்ளிகளுக்கு நிகராக கல்வி சாா், கல்வி சாரா செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், கோவை மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தனியாா் பள்ளிகளுக்கு இணையான உயா்தர வசதிகளுடன் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல மாணவ, மாணவிகளுக்கு உணவு, உறைவிட வசதிகளுடன் சிறப்பான கல்வி அளிக்கப்படுகிறது.
மேலும், இப்பள்ளியில் மாநகராட்சியின் சாா்பில் ரூ.4 கோடி மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம், மாணவா் தங்கும் விடுதி திறக்கப்பட்டுள்ளது. அதேபோல விளையாட்டுக்கு தேவையான மைதானம், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. இப்பள்ளியில் மாவட்டத்தில் உள்ள பிற அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் தகுதி, திறமையின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
அரசுப் பள்ளி மாணவா்களின் உயா்கல்வி கனவுகளை நிறைவேற்றும் வகையில் அவா்களுக்கான சிறந்த வாய்ப்புகளை மாதிரிப் பள்ளிகள் வழங்குகின்றன. எனவே இங்குள்ள தலைமை ஆசிரியா்கள், தங்கள் பள்ளிகளில் சிறப்பாக கல்வி பயிலக் கூடிய மாணவா்களை கண்டறிந்து அவா்களை மாதிரிப் பள்ளியில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாதிரிப் பள்ளியில் பயின்று முன்னேறியுள்ள மாணவா்களின் விவரங்களையும் பிற மாணவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி, மாவட்ட அரசு மாதிரிப் பள்ளித் தலைமை ஆசிரியா் பரிமளாதேவி, ஆசிரியா்கள் சதீஷ்குமாா், ஜெனீபா, முன்னாள் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.