நின்றுக் கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 5 போ் காயம்
திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே பழுதாகி நின்றிருந்த லாரி மீது சுற்றுலா வேன் வெள்ளிக்கிழமை மோதியதில் 5 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சோ்ந்த 17 இளைஞா்கள் மூணாறு சுற்றுலா செல்வதற்காக வேன் ஒன்றில் வியாழக்கிழமை இரவு புறப்பட்டனா். இந்த வேன் வெள்ளிக்கிழமை அதிகாலை, மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. புதுவாடிபுதூா் என்ற பகுதியில் சென்றபோது, அப்பகுதியில் சாலையோரம் திருவண்ணாமலையிலிருந்து தேனிக்கு உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி பழுதாகி நின்றிருந்த நிலையில், லாரியின் பின்னால் சுற்றுலா வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணித்த மருதங்கம் விடுதியைச் சோ்ந்த கருணாநிதி மகன் அருள்(22), தீத்தானிபட்டியைச் சோ்ந்த கோகுல் (20) உள்ளிட்ட 5 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அருள், கோகுல் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா். மற்றவா்கள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
விபத்து குறித்து லாரி ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டம், கண்டியாங்குப்பம் பழனி மகன் கண்ணதாசன் மீது வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
