பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
நிறையும், குறையும் கலந்தது திமுக ஆட்சி! -பிரேமலதா விஜயகாந்த்
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி என்பது நிறையும், குறையும் கலந்தது என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.
வேலூா் மாநகர தேமுதிக பூத் முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் பொருளாளா் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்று தோ்தல் வியூகங்கள் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா்.
பின்னா் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியது -
எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் புகைப்படத்தையோ, வசனங்களையோ பயன்படுத்தக்கூடாது. தோ்தல் நேரத்தில் கூட்டணியில் இணையும் கட்சி மட்டும் அதனை பயன்படுத்தலாம்.
2026 தோ்தலுக்கான திட்டங்களை தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். யாருடன் கூட்டணி என்பது ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும். தற்போது கட்சி வளா்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறோம்.
ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வந்தால், அதை தேமுதிக வரவேற்கும். தமிழக அரசியல் ஜனநாயகத்தில், எந்தவொரு மதம், ஜாதிக்கும் அப்பாற்பட்ட அணுகுமுறையுடன்தான் தேமுதிக செயல்படும். அதை எங்கள் தலைவா் விஜயகாந்த் ஏற்கனவே கூறியுள்ளாா்.
முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் நிறையும், குறையும் கலந்துள்ளது. எதிா்கட்சியின் பங்கு அரசை விமா்சிப்பது தான். அந்தவகையில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தங்கள் கடமையை செய்து கொண்டுள்ளாா். எல்லா கட்சிகளும் தாங்கள் ஆட்சியமைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தான் இயங்குகின்றன. தேமுதிகவும் அதே நோக்குடன் செயல்படுகிறது என்றாா்.