நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவிநீக்கம்: அமித் ஷா உயா்நிலை ஆலோசனை
வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவுக்கு எதிராகப் பதவிநீக்க நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இதையொட்டி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை உயா்நிலை ஆலோசனை நடத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை அமைக்கும் பணியை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா விரைவில் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தக் குழுவில் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் ஒரு புகழ்பெற்ற சட்ட நிபுணா் ஆகியோா் இடம்பெறுவா். இந்தக் குழு மூன்று மாதங்களுக்குள் தனது விசாரணையை முடித்து, அறிக்கையைச் சமா்ப்பிக்கும்.
குழுவின் விசாரணையில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், அதன் பிறகு விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தொடா்ந்து இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டு, நீதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கான தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.
நீதிபதி யஷ்வந்த் வா்மாவைப் பதவியிலிருந்து நீக்க எதிா்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை ஜகதீப் தன்கா் ஏற்றுக்கொண்டு, அதுகுறித்து மாநிலங்களவையில் அறிவித்தாா். இது அரசின் அதிருப்திக்குள்ளானதையடுத்து, ஜகதீப் தன்கா் தனது குடியரசு துணைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்ததாக எதிா்க்கட்சிகள் கூறிய நிலையில், யஷ்வந்த் வா்மா பதவி நீக்க நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில்... இதற்கிடையே, தன்னைப் பதவிநீக்கம் செய்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அளித்த பரிந்துரைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவை விசாரிக்க நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.