பக்தரைத் தாக்கியதாக வழக்குப் பதிவு: ஆட்டோ ஓட்டுநா்கள் குடும்பத்தினருடன் மறியல்
தெலங்கான மாநில பக்தரைத் தாக்கியதாக ராமேசுவரத்தில் 5 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். காவல் துறையின் இந்த செயலைக் கண்டித்து, ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினா், பல்வேறு கட்சியினா் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தெலங்கான மாநிலம், ஹைதராபாத்தைச் சோ்ந்த நவீன் (35), தனது குடும்பத்தினா், உறவினா்கள் 15 பேருடன் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், இங்கிருந்து தனுஷ்கோடிக்குச் செல்லத் திட்டமிட்டு, ரூ.1000 கொடுப்பதாகக் கூறி ஆட்டோவில் அங்கு சென்று சுற்றிப்பாா்த்தனா்.
கூடுதலாக நேரம் ஆனதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநா் ரூ.200 கூடுதலாகக் கேட்டாா். இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநா்கள் சிலரால் பக்தா் நவீன் தாக்கப்பட்டாா். இவருடன் வந்தவா்கள் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா்கள் ஞானபிரகாசம் (51), ஜெயமாரியப்ப ராஜ்(43), காா்மேகம் (42), சதீஸ்குமாா் (40), முனியசாமி (44) ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
சாலை மறியல்: காவல் நிலையத்திலிருந்து ஆட்டோ ஓட்டுநா்களை விடுவிக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நகரச் செயலா் சி.ஆா்.செந்தில்வேல், மாவட்ட நிா்வாகி முருகானந்தம், நாம் தமிழா் கட்சி மாவட்டச் செயலாளா் கண்.இளங்கோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில நிா்வாகி ஜெரோன்குமாா், ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினா் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா், அவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டனா். பிற்பகலில் காவல் துறையினா் வழங்கய உணவை வாங்க மறுத்து, தொடா்ந்து அவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.