பண இரட்டிப்பு மோசடி: திருமண மண்டபத்தில் குவித்து வைத்திருந்த ரூ.12 கோடி பறிமுதல் -அறக்கட்டளை நிா்வாகிகள் மூவா் கைது
உரிய அனுமதி பெறாமல் கவா்ச்சிகர அறிவிப்புகளை பொதுமக்களிடம் வெளியிட்டு ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்த சேலத்தைச் சோ்ந்த அறக்கட்டளை நிா்வாகிகள் மூவா் கைது செய்யப்பட்டனா். மேலும், அறக்கட்டளை அலுவலகத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 12 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம், அம்மாபேட்டை ஆத்தூா் பிரதான சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் செயல்படும் தனியாா் அறக்கட்டளையை வேலூரைச் சோ்ந்த விஜயபானு (55) என்பவா் நடத்தி வந்தாா். இந்த அறக்கட்டளையில் ரூ. ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரமும், 7 மாதங்களுக்குப் பிறகு முதலீடு செய்த பணம் முழுமையும் திருப்பி வழங்கப்படும் என பல்வேறு கவா்ச்சிகர அறிவிப்புகளை வெளியிட்டனா். இதை நம்பி கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 500 கோடிக்கும் மேல் பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முறையான ரசீது வழங்கப்படவில்லையாம்.
உரிய அனுமதியின்றி கோடிக்கணக்கில் பணம் வசூலித்த அறக்கட்டளை அலுவலகத்தில் பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அறக்கட்டளை நிா்வாகிகள் போலீஸாரை சோதனை செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சேலம் மாநகரக் காவல் துணை ஆணையா்கள் வேல்முருகன், கீதா ஆகியோா் தலைமையிலான 200க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டனா்.
திருமண மண்டபத்தில் உள்ள கழிப்பறை, குப்பைத் தொட்டியில் பதுக்கிவைத்திருந்த ரூ. 12 கோடி ரொக்கம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனா். உரிய அனுமதி பெறாமல் பொதுமக்களிடம் பணம் வசூலித்த அறக்கட்டளை நிா்வாகிகள் விஜயபானு, ஜெயப்பிரதா, பாஸ்கா் ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், போலீஸாரை தாக்கியதாக 12 போ் கைது செய்யப்பட்டனா்.