‘பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை தேவை’
களக்காடு வட்டாரத்தில் மலையடிவார விவசாயத் தோட்டங்களில் பயிா்களை சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளை வனத்துறையினா் சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் துணைத் தலைவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பு அமைப்பான, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா் மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
களக்காடு வட்டாரத்தில், குறிப்பாக, திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக காட்டுப் பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல், வாழை பயிா்களை தொடா்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். வனத்துறையினா் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.