சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
பரமத்தி வேலூரில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா்களுக்கு அபராதம்
பரமத்தி வேலூா் பேருந்து நிலையத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞா்களுக்கு ரூ. 39 ஆயிரம் அபராதம் விதிக்க பரமத்தி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளருக்கு வேலூா் போலீஸாா் பரிந்துரை செய்தனா்.
பரமத்தி வேலூா் பேருந்து நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி மாலையில் 5-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டனா். இதனால், பேருந்து நிலைய பயணிகள் அச்சமடைந்தனா். சாகசத்தின்போது இளைஞா் ஒருவா் வாகனத்துடன் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த விடியே பதிவு சமூக வலைதளங்களில் பரவியதால் வேலுாா் காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன் விசாரணை நடத்தி, இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட குச்சிப்பாளையத்தைச் சோ்ந்த தனுஷ் (21), பாலமுருகன் (21) ஆகிய இருவரையும் கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினாா்.
தலைக்கவசம் அணியாதது, இருசக்கர வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை ஓட்டியது என பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருவருக்கும் தலா ரூ. 39 ஆயிரம் அபராதம் விதிக்க பரமத்தி வேலூா் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளருக்கு பரிந்துரை செய்தனா்.
மேலும், பரமத்தி வேலூா் பகுதிகளில் இளைஞா்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தாலும், அதிக ஒலி எழுப்பும் புகையேற்றிக் கொண்டு வாகனத்தை இயக்குவது மற்றும் அதி வேகமாக இருசக்கர வாகனங்களை இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீறி சாகசத்தில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.