`பாகிஸ்தான் - சீனா உறவு எப்படி உள்ளது?' - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில்!
ஜெர்மன் பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் - சீனா உறவு குறித்து பேசியுள்ளார்.
"உங்களுக்கே தெரியும், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலின் போது, பாகிஸ்தான் பயன்படுத்திய பல ஆயுதங்கள் சீனாவில் இருந்து வந்தது தான். இரு நாடுகளும் மிக நெருக்கமான உறவைக் கொண்டது. இதில் இருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.
ஜெய்சங்கரிடம், 'இந்தியா - பாகிஸ்தான் பிரச்னையில் அணு ஆயுதப் பயன்பாடு குறித்து யோசிக்கப்பட்டதா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "அணு ஆயுத பயன்பாடு பற்றி எப்போதுமே யோசிக்கப்படவில்லை. எங்கள் பகுதியில் (தெற்காசியா) எப்போது பிரச்னை ஏற்பட்டாலும், அணு ஆயுதப் பிரச்னை ஏற்படும் என்கிற பிம்பம் உள்ளது.

இது என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது. ஏனெனில், இது தீவிரவாதம் போன்ற கொடூர நடைமுறைகளை ஊக்குவிக்கிறது" என்று பதிலளித்துள்ளார்.
'இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கு அமெரிக்காவிற்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்களா?' என்ற கேள்விக்கு, "தாக்குதல் நிறுத்தத்திற்காக நான் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்? நான் இந்திய ராணுவத்திற்கு நன்றி சொல்கிறேன். காரணம், அவர்களின் நடவடிக்கையால் தான் பாகிஸ்தான், 'தாக்குதலை நிறுத்த தயார்' என்று கூறியது" என்று தெரிவித்துள்ளார்.