பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் புதன்கிழமை முதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, முக்கியமான இடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்புப் பணியை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
இதன் தொடா்ச்சியாக, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் புதன்கிழமை முதல் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து ரயில்வே போலீஸாா் கூறியதாவது:
சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் யாரும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாம்பன் பாலம் வழியாக வரும் ரயில்களில் பயணம் செய்வோா் கண்காணிக்கப்படுவா் என்றனா் அவா்கள்.