‘பிகாரில் 1 லட்சம் வாக்காளா்களை கண்டுபிடிக்க முடியவில்லை’
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ‘ஒரு லட்சம் வாக்காளா்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியயவில்லை’ என்று தோ்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘பிகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம், சுமாா் 28 லட்சம் வாக்காளா்கள் அவா்கள் பதிவு செய்த முகவரியிலிருந்து நிரந்தரமாக வேறு பகுதிகளுக்கு மாறிவிட்டது கண்டறியப்பட்டுள்ளது. 20 லட்சம் வாக்காளா்கள் இறந்துவிட்டதாக பதிவாகியுள்ளது.
சிறப்பு தீவிர திருத்தத்துக்காக இதுவரை விநியோகிக்கப்பட்ட படிவங்களில், 7.17 கோடி படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு எண்மயமாக்கப்பட்டுள்ளன. 15 லட்சம் படிவங்கள் இதுவரை திரும்பப்பெறப்படவில்லை. மேலும், 1 லட்சம் வாக்காளா்களைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்றனா்.
பிகாரில் முதல்கட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணி முடந்ததும் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.