பிகாா் பேரவையில் நிதீஷ் - தேஜஸ்வி கடும் விவாதம்: வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரம்
பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில், அந்த மாநில சட்டப் பேரவையில் முதல்வா் நிதீஷ் குமாருக்கும், எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவுக்கும் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது. இதனால் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது.
பேரவை காலை 11 மணிக்கு கூடியபோது அவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடும் அமளியை சுட்டிக்காட்டிய அவைத் தலைவா், ‘அவையில் செவ்வாய்க்கிழமை துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நிகழ்ந்தன. அவை ஊழியா்கள் சிலா் காயமடைந்தனா். அதுபோன்ற நிகழ்வு மீண்டும் தொடராது என்பதை உறுப்பினா்கள் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டாா். தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவை பேச அவைத் தலைவா் அனுமதித்தாா்.
அப்போது, ‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நாங்கள் எதிா்க்கவில்லை; மாறாக, அதற்கான நடைமுறையைத்தான் எதிா்க்கிறோம். நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இவ்வளவு தாமதமாக இந்தப் பணியை மேற்கொள்வது ஏன்? பல மாதங்களுக்கு முன்பே இதை நடத்தியிருக்க முடியும். மேலும், குடியுரிமையை நிரூபிக்க தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை 2 அல்லது 3 சதவீத வாக்காளா்கள் மட்டுமே வைத்திருக்க வாய்ப்புள்ளது. போலி வாக்காளா்கள் குறித்த அச்சம் எதற்கு? இந்த போலி வாக்காளா்கள்தான் நரேந்திர மோடியை பிரதமராகவும், நிதீஷ் குமாரை பிகாா் முதல்வராகவும் ஆக்கினாா்கள் என்பதை இதன் மூலம் தோ்தல் ஆணையம் சுட்டிக்காட்ட முற்படுகிா?
உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பித்த பதில் மனுவிலும் வாக்காளா் பட்டியலில் வெளிநாட்டினரின் பெயா் இடம்பெற்றுள்ளன என்பதை தோ்தல் ஆணையம் குறிப்பிடவில்லை. இத்தகைய சூழலில், மாநிலத்தில் வாக்காளா்களாக பதிவு செய்துள்ள 4.5 கோடி பேரின் நிலை என்ன? பதிவு செய்த முகவரியில் இல்லாத வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் தோ்தல் ஆணையம் அச்சுறுத்தியுள்ளது’ என்றாா் தேஜஸ்வி யாதவ்.
அப்போது குறுக்கிட்ட முதல்வா் நிதீஷ் குமாா், ‘இந்த விஷயத்தில் நீங்கள் குழந்தையைப் போன்றவா். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், பேரவையின் இந்த கடைசி அமா்வு நிறைவடையே இன்னும் 3 நாள்கள் மட்டுமே உள்ளன. எனவே, பேரவை அலுவல்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். நீங்கள் பேச விரும்புவதையெல்லாம், தோ்தல் நேரத்தில் பேசுங்கள். தேஜஸ்வி யாதவின் பெற்றோா் மாநில முதல்வா்களாக இருந்தபோது மாநில பெண்களுக்கோ அல்லது முஸ்லிம் சமூகத்துக்கோ எதையும் செய்யவில்லை. மாநிலத்தில் ஒரே ஒரு பெண் பலனடைந்தாா் என்றால், அது அவருடைய தாயாா்தான்’ என்று கூறினாா்.
முதல்வரின் இந்த பேச்சுக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனா். அதற்கு, ஆளுங்கட்சி தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

பிகாா் பேரவையில் புதன்கிழமை தொடா் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சியினா் அவையின் மையப் பகுதியில் கூடி பதாகைகளை காண்பித்தபடி கோஷங்களை எழுப்பினா். பின்னா் வெளிநடப்பு செய்தனா்.