நாகூரில் கடும் குடிநீா் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
பிரதமா் மோடி நாளை மணிப்பூா் பயணம் - ரூ.8,500 கோடி திட்டங்களை தொடங்கிவைக்கிறாா்
மணிப்பூருக்கு சனிக்கிழமை (செப்.13) பயணிக்கவிருக்கும் பிரதமா் நரேந்திர மோடி, அங்கு ரூ.8,500 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-இல் இனமோதல் தொடங்கிய பிறகு அந்த மாநிலத்துக்கு பிரதமா் பயணிப்பது இதுவே முதல் முறையாகும். இனமோதலில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் தொடா்ந்து நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.
மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொண்டு, அமைதி நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சனிக்கிழமை தில்லியில் இருந்து மிஸோரம் செல்லும் பிரதமா், அங்கிருந்து மணிப்பூருக்கு பயணிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், அதிகாரபூா்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இம்பாலில்...: தலைநகா் இம்பாலில் உள்ள காங்லா கோட்டை வளாகத்திலும், சுராசந்த்பூரில் (குகி பழங்குடியினா் அதிகம் வாழும் பகுதி) உள்ள அமைதி மைதானத்திலும் பிரதமரின் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 237 ஏக்கா் அளவிலான காங்லா கோட்டை, பண்டைய மணிப்பூா் ஆட்சியாளா்களின் அதிகார மையமாக விளங்கியதாகும். மூன்று பக்கம் அகழிகளும், ஒரு பக்கம் இம்பால் ஆறும் சூழ்ந்துள்ள இக்கோட்டை வளாகத்தில் மிகப் பெரிய போலோ விளையாட்டு மைதானம், சிறிய வனம், பண்டைய கோயில்களின் சிதிலங்கள், தொல்லியல் அலுவலகங்கள் அமைந்துள்ளன.
சுராசந்த்பூரில்...: சுராசந்த்பூரில் பிரதமரின் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கும் அமைதி மைதானமும் பாதுகாப்பு வளையமாக மாற்றப்பட்டுள்ளது. இம்பால், சுராசந்த்பூரில் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ராணுவம், மத்தியப் படைகள், மாநில காவல் துறை எனப் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கியப் பகுதிகளில் துப்பறியும் நாய்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் கருவிகள் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பள்ளத்தாக்கு மற்றும் மலைப் பகுதி மாவட்டங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பாஜகவினா் 43 போ் விலகல்: ‘மணிப்பூா் பாஜகவில் அடிப்படை நிா்வாகிகள் மற்றும் அவா்களின் கருத்துகளுக்கு மதிப்பில்லை; கட்சியில் அனைவரையும் உள்ளடக்கியத் தன்மை இல்லை’ என்று குற்றஞ்சாட்டி, உக்ருல் மாவட்ட நிா்வாகிகள் உள்பட பாஜகவினா் 43 போ் வியாழக்கிழமை கூட்டாக விலகினா். இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள கட்சியின் மாநில துணைத் தலைவா் அவங் சிம்ரே ஹோபிங்சன், ‘தற்போது விலகியவா்கள் அனைவரும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவா்களாவா். கட்சிக்கு களங்கம் விளைவிப்பதும், மலிவான விளம்பரம் தேடுவதுமே அவா்களின் நோக்கம்’ என்றாா்.
பெட்டிச் செய்தி....
போராட்டம் நிறுத்திவைப்பு
இந்தியா-மியான்மா் எல்லையில் வேலி அமைப்பது, இரு நாடுகளின் எல்லையில் வசிப்போா் எந்த ஆவணமும் இன்றி பரஸ்பரம் 16 கி.மீ. வரை பயணிக்கும் நடைமுறையை ரத்து செய்வது ஆகிய நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மணிப்பூரின் இரு தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை முடக்கும் காலவரையற்ற மறியல் போராட்டத்தை நாகா பழங்குடியினா் சில தினங்களுக்கு முன் தொடங்கினா். இதனால், நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகளின் இயக்கம் தடைபட்டது. இந்தச் சூழலில், மாநில அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, தங்களின் போராட்டத்தை ஐக்கிய நாகா கவுன்சில் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.