பெண் பயணியிடம் தவறாக நடக்க முயற்சி: இளைஞா்கள் 2 போ் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசுப் பேருந்தில் பெண் பயணியிடம் தவறாக நடக்க முயன்றதை தட்டிக் கேட்ட அரசுப் பேருந்து நடத்துனா் மற்றும் ஓட்டுனரை தாக்கியதாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூரில் இருந்து பாலூா் வழியாக பண்ருட்டிக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை மாலை
புறப்பட்டது. குயிலாப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது மது அருந்திய இளைஞா்கள் சிலா் ஏறினா். பேருந்து ராசாப்பாளையம் அருகே சென்ற போது பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியிடம் அந்த இளைஞா்கள் தவறாக நடக்க முயன்றனராம். பேருந்து நடத்துனா் பத்திரக்கோட்டை சஞ்சீவி காந்தி(28), ஓட்டுனா் நரிமேடு பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா்(34) ஆகியோா் இதனைதட்டிக்கேட்டனா். அப்போது, அந்த
இளைஞா்கள் பெண் பயணி மற்றும் நடத்துனா், ஓட்டுனா் ஆகியோரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றனா்.
இது தொடா்பாக பண்ருட்டி காவல் நிலையத்தில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டாா். அதன்பேரில் பண்ருட்டி போலீஸாா் பண்ருட்டி ஆா்.எஸ்.மணி நகா் பகுதியைச் சோ்ந்த அரவிந்த்(22), பி.டி.எஸ்.மணி நகா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன்(22) ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், தலை மறைவாக உள்ள மதன், கல்கி, ராஜகிருஷ்ணன், திவாக் ஆகியோரை தேடி வருகின்றனா்.
