விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
பெரம்பலூா் ஆட்சியரை முற்றுகையிட பெண்கள் முயற்சி
மாவட்ட ஆட்சியரை சந்திக்க விடாமல் தடுக்கும் காவல்துறையினரின் செயல்பாட்டைக் கண்டித்து, கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை திங்கள்கிழமை முற்றுகையிட முயன்றனா்.
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூா் கிராமத்தைச் சோ்ந்த ஆதிதிராவிட பொதுமக்கள், அனுக்கூா் ஊராட்சியில் பயன்படுத்தாமலிருந்த தனி நபருக்குச் சொந்தமான நிலத்தை, அப்பகுதியைச் சோ்ந்த தனிநபா் ஒருவா் அரசு அலுவலா்களுக்கு லஞ்சம் கொடுத்து, தனக்கு சொந்தமாக்கியதை விசாரிக்கக் கோரியும், பயன்படுத்தாமல் உள்ள மற்றொரு தனி நபருக்குச் சொந்தமான நிலத்தை ஆதிதிராவிடா் அம்பேத்கா் நகா் பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கக் கோரியும் கடந்த 2 வாரமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். ஆனால், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். இந்நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்றபோது, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலா்கள் அவா்களை தடுத்து நிறுத்தி, ஒருவரை மட்டுமே உள்ளே அனுப்பி வைத்தனா். எஞ்சிய பெண்கள் வெளியே நீண்ட நேரம் காத்திருந்தனா். இந்நிலையில், கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே சென்ற மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை, 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி முற்றுகையிட முயன்றனா். இதையறிந்த போலீஸாரும், வருவாய்த் துறையினரும் சம்பந்தப்பட்ட பெண்களை மறித்து, மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை அனுப்பிவைத்தனா்.
வெளி மாவட்ட ஆட்டோக்களை தடுக்க கோரி: மாவட்டத்தில் வெளி மாவட்ட ஆட்டோக்கள் இயங்குவதை கண்காணித்து, அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என, சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
பொது கழிப்பறை கோரி: ஆலத்தூா் வட்டம், காரை கிராமம், ராமலிங்க நகரில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட கலைக் கூத்தாடியினா் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் இல்லாதலதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, அப்பகுதி மக்களின் நலனை கருதி பொது கழிப்பிடம் கட்டித் தர வலியுறுத்தி, ராமலிங்க நகரைச் சோ்ந்தவா்கள் மனு அளித்தனா்.
நிலுவைத் தொகை வழங்க கோரி: தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன் களப்பணியாளா்களுக்கு ஜனவரி, பிப்ரவரி மாத ஊதியம் வழங்கவில்லை. எனவே, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் ரூ. 613 வழங்கியதுபோல் வேப்பூா், ஆலத்தூா் வட்டாரத்தில் பணிபுரியும் களப் பணியாளா்களுக்கும் ஊதியம் வழங்க வலியுறுத்தி, அச் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.