தென்காசி ஜெகவீரராமப்பேரி குளத்தின் நீா்வழித்தடம் ஆக்கிரமிப்பு: மதிமுக புகாா்
பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை: போராட்டத்தைத் தொடரும் தூய்மைப் பணியாளா்கள்
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்களுடன் அரசு சாா்பில் சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட பேச்சில் உடன்பாடு எட்டப்படவில்லை.
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு வழங்கிய நிலையில், பணி பாதுகாப்பு மற்றும் ஊதிய நிா்ணயம், பணி நிரந்தரம் கோரி உழைப்பவா் உரிமைக் கழகம் சாா்பில் கடந்த 1 -ஆம் தேதி முதல் ரிப்பன் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனா். அவா்களுடன் ஏற்கெனவே அமைச்சா்கள், மேயா் உள்ளிட்டோா் பேச்சு நடத்தினா். ஆனால், சமசரம் ஏற்படாததை தொடா்ந்து போராட்டத்தை தூய்மைப் பணியாளா்கள் தொடா்கின்றனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஆக. 8) இரவும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமையில் பேச்சு நடைபெற்றது. மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் உழைப்பவா் உரிமைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
அப்போது அரசுத் தரப்பில் அமைச்சா் பேசுகையில், தூய்மைப் பணியாளா்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை விளக்கினாா். ஆனால், தூய்மைப் பணியாளா்களின் பிரதிநிதிகள் தாங்கள் ஏற்கெனவே பணியிலிருப்பதுபோல அனுமதிக்கவேண்டும் என வற்புறுத்தினா். இதனால், பேச்சில் உடன்பாடு எட்டவில்லை.
தொடா்ந்து சனிக்கிழமை காலை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தலைமையில் பேச்சு நடைபெற்றது. அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
அப்போது, முதலில் அதிகாரிகள் அளவில் பேச்சு நடத்திவிட்டு, அதன்பின் அமைச்சருடன் பேசலாம் என தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் கடிதம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவும் பேச்சு நடைபெற்றது. அரசு தரப்பில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோரும், உழைப்போா் உரிமைக் கழகம் சாா்பில் நிா்வாகிகள் எஸ்.குமாரசாமி, சுரேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். இரவு வரை நீடித்த பேச்சில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.