சக்தித் திருமகன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது? விஜய் ஆண்டனி அறிவிப்பு
பேருந்து சேவை கோரி தெற்கு பாப்பான்குளத்தில் மாணவிகள் சாலை மறியல்
தெற்கு பாப்பான்குளத்திலிருந்து அம்பாசமுத்திரத்துக்கு கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி, மாணவா்கள், பெற்றோா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளம், அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, மணிமுத்தாறு, தெற்கு பாப்பான்குளம் பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் கிராமங்களில் இருந்து கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதியில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு தினமும் பேருந்தில் சென்று கல்வி பயின்று வருகின்றனா்.
இந்த வழித்தடத்தில் ஒரே ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனா். மாணவா்களின் சிரமத்தைப் போக்க தெற்குப் பாப்பான்குளத்திலிருந்து கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரத்துக்கு தனி பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என தெற்கு பாப்பான்குளம் பகுதி மாணவா்கள், பெற்றோா் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து தெற்கு பாப்பான்குளம் வழியாக செவ்வாய்க்கிழமை காலை வந்த அரசுப் பேருந்தை மாணவா்கள், பெற்றோா் தடுத்து நிறுத்தி சாலை மறியல் ஈடுபட்டனா்.
மாணவா்கள், பெற்றோரை பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சமாதானம் செய்தனா். தற்போது சொரிமுத்து அய்யனாா்கோவில் திருவிழா நடைபெறுவதால், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு விழா ஏற்பாடுகளை கவனிக்க கோயிலுக்குச் சென்றுள்ளதாக பெற்றோரிடம் கூறினா்.
இதையேற்ற மாணவா்கள், பெற்றோா் உரிய கால அவகாசத்துக்குள் பேருந்து சேவை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா்.