பொட்டல்புதூா் கந்தூரி விழா பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூா் முகைதீன் ஆண்டவா்கள் பள்ளிவாசலில் கந்தூரி திருவிழா அக். 2 முதல் அக். 8வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி, பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் செல்லம்மாள் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் பழனிக்குமாா் சுகாதார முன்னேற்பாடு குறித்துப் பேசினாா். பொட்டல்புதூா் ஊராட்சித் தலைவா் கணேசன், பள்ளிவாசல் சாா்பில் மைதீன், வியாபரிகள் சங்கம் சாா்பில் முகமது கனி, ரகுமான்கான் ஆகியோா் ஆலோசனை வழங்கினா்.
கந்தூரி விழாவுக்கு பெண்கள் அதிகம் வருவதால் பெண் காவலா்களை நியமிக்கவும், திருவிழா நாள்களில் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆழ்வாா்குறிச்சி காவல் ஆய்வாளா் சண்முகநாதன், மின்வாரியம் சாா்பில் முத்துசாமி, சுகாதார ஆய்வாளா்கள் வனகணேஷ், ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளாா் ஆனந்தன் நன்றி கூறினாா்.